சாலை விரிவாக்கப்பணி தொய்வால் சுரங்கப்பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்

 

திருப்பூர், ஜூலை 28: திருப்பூர் பூங்கா சாலை விரிவாக்கப்பணி மந்த கதியில் நடைபெற்று வருவதால் சுரங்கப்பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், யூனியன் மில் சாலையையும் பூங்கா சாலையையும் இணைக்கும் சுரங்கப்பாலப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. தற்போது சுரங்கப் பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்தன. இந்நிலையில், யூனியன் மில் சாலையில் சுரங்கப்பாலத்தின் தொடக்கப் பகுதியையும், யூனியன் மில் சாலையையும் இணைக்கும் வகையில் பாதை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. இதற்காக அப்பகுதியில் இருந்த ரவுண்டானா இடித்து அகற்றப்பட்டது.  ஆனால், ரவுண்டானா அகற்றப்பட்டு பல வாரங்கள் கடந்தும், அடுத்தகட்ட சாலை விரிவாக்கப் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது.

சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கப்படாததால் கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப் பாலமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாலத்தின் துவக்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்குத் தயார் நிலையில் உள்ள சுரங்கப் பாலத்தை உடனடியாகத் திறந்து வைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் அப்பகுதியின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: