தஞ்சாவூர்: வா என்று அழைத்து பின்பு வர வேண்டாம் என சொன்னால் தமிழக முதல்வரை கர்நாடக முதல்வர் இழிவு படுத்துகிறார் என கருதுகிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.தமிழக பாஜ சார்பில் மேகதாதுவில் அணைகட்ட முயற்சி செய்யும் கர்நாடக முதல்வரை கண்டித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பாஜவினர் நேற்று மாலை பேரணியாக சென்று பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியை தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்தும், உரிய நேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் பெற்று தராத காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை கண்டித்தும் பாஜ சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சிவகுமார், இங்கு தமிழகத்தில் காங்கிரசில் இரண்டு அமைச்சர்கள் வைத்திருக்கிறார்கள். இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும், தமிழக காங்கிரஸ் அமைச்சர்களும், முதல்வரும் ஏன் கர்நாடகா போகவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி.
எது எப்படி இருந்தாலும் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்லாதது முதல்வரை இழிவுபடுத்துவதாக நான் கருதுகிறேன். பேச்சு வார்த்தைக்கு வா என்று கர்நாடகா முதல்வர், தமிழக முதல்வரை அழைத்துவிட்டு பின்பு வர வேண்டாம் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம், தமிழக முதல்வரை கர்நாடகா முதல்வர் இழிவு படுத்துகிறார் என்று தான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
