புதுடெல்லி: பீகார் இடைத்தேர்தலில் பா.ஜ தேசிய தலைவர் நிதின் நபின் சொந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பா.ஜ தேசிய தலைவராக நியமிக்கப்பட்டதால் நிதின் நபின் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மாநிலங்களவைக்கு தேர்வானார். இதை தொடர்ந்து அவரது சொந்த தொகுதியான பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி காலியானது. நிதின் நபின் தொடர்ந்து 20 ஆண்டுகள் இத்தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன் அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹா 10 ஆண்டுகள் இந்த தொகுதியை கைவசம் வைத்து இருந்தார். நிதின் நபின் குடும்பத்தினர் பாங்கிபூர் தொகுதி பீகாரில் பாஜவின் மிக வலிமையான கோட்டைகளில் ஒன்றாக மாற்றியிருந்தனர்.
இந்த தொகுதி இடைத்தேர்தலில் 2025ல் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்த தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் களம் இறங்கினார். பா.ஜ சார்பில் நீரஜ் குமார் சின்ஹா மற்றும் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பில் ரேகா குமாரி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து பா.ஜவுக்கு அதிர்ச்சி அளித்த பிரசாந்த் கிஷோர் 19,246 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
2025 பீகார் சட்டப்பேரவை தேர்தல் படுதோல்விக்கு பிறகு பாங்கிபூர் இடைத்தேர்தல் பிரசாந்த் கிஷோரின் அரசியல் சோதனைக்கான ஒரு வாக்கெடுப்பாக அமைந்தது. அதே சமயம் பாஜவுக்கும் இது ஒரு முக்கியத் தேர்வாக இருந்தது. ஏனெனில், பாஜவைச் சேர்ந்த சம்ராட் சவுத்ரி பீகாரின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். பாங்கிபூர் தொகுதியில் கடந்த 35 ஆண்டுகளாகத் தங்கள் வசம் இருந்த ஆதிக்கத்தின் மூலம் இடைத்தேர்தலில் எளிதாக வெற்றிபெறலாம் என்று பாஜ முதலில் நம்பிக்கையுடன் இருந்தது.
முதலில் அபிஷேக் குமார் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக 32 வயதான கட்சியின் இளைஞரணித் தலைவர் நீரஜ் குமார் சின்ஹா வேட்பாளராக மாற்றப்பட்டார். பிரசாந்த் கிஷோரின் பிரசாரம் வேகம் பெற்ற நிலையில், வேட்பாளர் மாற்றம் பாஜவின் பதற்றத்தை வெளிப்படுத்தியது.
பிரச்சாரத்தின் ஆரம்பக் கட்டத்தில் பெரிதாக முன்னிலையில் இல்லாத பா.ஜ தேசிய தலைவர் நிதின் நபின், நேரடியாகக் களத்தில் இறங்கினார். பீகார் முதல்வர் சம்ராட் சவுத்ரியுடன் இணைந்து பாட்னா முழுவதும் வாகனப் பேரணிகளை நடத்தினார். பிரச்சாரத்தின் கடைசி நாளில் முக்கிய கோவில்களுக்குச் சென்ற அவர், வாக்குச் சாவடி அளவிலான தொண்டர்கள், வார்டு கவுன்சிலர்கள், இளைஞரணித் தலைவர்கள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களைச் சந்தித்து, வாக்காளர்களைத் திரட்டும் பணிகளைத் துரிதப்படுத்தினார்.
ஒன்றிய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், முதல்வர் சம்ராட் சவுத்ரி, சிராக் பாஸ்வான், ரவிசங்கர் பிரசாத், மனோஜ் திவாரி, ரவி கிஷன் மற்றும் முக்கிய சாதிப் பிரிவுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட சமூகத் தலைவர்கள் என சுமார் 40 நட்சத்திரப் பிரச்சாரகர்களை பாஜ களமிறக்கியது. இந்த பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்து, காணொளி வாயிலாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஜூலை 28 அன்று பிரச்சாரம் நிறைவடைந்து, ஜூலை 30அன்று 34.24 சதவீத வாக்குப்பதிவுடன் மக்கள் வாக்களித்தபோது, பாங்கிபூர் தொகுதி வெறும் ஒரு சாதாரண இடைத்தேர்தல் களமாக மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றதும் பாங்கிபூர் தொகுதி தேசிய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தேர்தல் வியூக வகுப்பாளர் இறுதியாக தனது சொந்த மாநிலத்தில் தனது வெற்றிக்கான விடையை கண்டுபிடித்துவிட்டார்.
* பாங்கிபூர் ஒரே இரவில் பெங்களூருவாக மாறிவிடாது
பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த பிரசாந்த் கிஷோர்,’ நான் எம்எல்ஏ ஆவதால் பாங்கிபூர் ஒரே இரவில் பெங்களூருவாக மாறிவிடாது; ஆனால் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள். மக்கள் எனக்கு அளித்த ஆசியுடன் பாங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். எனது போராட்டம் எந்தவொரு தனிநபருக்கும் எதிரானது அல்ல. அது மாநிலத்தின் தலைமைத்துவத்தைப் பற்றியது. இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல. சம்ராட் சவுத்ரியின் நடத்தை, குணம் மற்றும் பொதுப் பிம்பம் ஆகியவை அனைவருக்கும் தெரிந்தவை. ஒரு குற்றவாளியை பீகாரின் அரசராகவோ அல்லது முதல்வராகவோ ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.
எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருக்கும் எதிரானது அல்ல. பெரும்பான்மை பலம் பாஜ வசமே உள்ளது, எனவே முதல்வரும் அவர்களிடமிருந்தே வருவார். பீகார் முன்னேறவும், மக்கள் தாங்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமை கொள்ளவும், நல்ல குணமும் திறமையும் கொண்ட ஒருவரை முதல்வராக நியமிக்குமாறு மோடியிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்தத் தேர்தல் பாங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்தே இது நடத்தப்பட்டது. ‘ஒரு நல்ல மனிதரை முதல்வராக்குங்கள்’ என்ற செய்தியை பாங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அவர்களது 30 ஆண்டு சரித்திரம் 30 நாட்களில் வீழ்த்தப்பட்டுள்ளது’ என்றார்.
* பாஜ தனது தேசிய தலைவர் வகித்த தொகுதியையே இழந்துவிட்டது: கெஜ்ரிவால் கருத்து
பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோருக்கு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார். அதில்,’பாஜ தனது தேசியத் தலைவரின் தொகுதியையே இழந்துவிட்டது. பாங்கிபூரில் பிரசாந்த் கிஷோர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாஜவின் செல்வாக்கு தளம் முற்றிலும் சரிந்துவிட்டது. நிதி முறைகேடு, வினாத்தாள் கசிவு, இ20 விவகாரம் என மோடி அரசின் மீது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களின் ஆணவம் தகர்ந்து வருகிறது. நாட்டின் மக்கள் மாற்றத்திற்கான சமிக்ஞையை அளித்துள்ளனர்’ என்றார்.
* பீகார் முதல்வர் வாழ்த்து
பீகார் முதல்வர் சம்ராட் சவுத்ரி, மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறி, பிரசாந்த் கிஷோரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ஜனநாயகத்தின் இந்தப் பெருவிழாவில், பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஜன் சுராஜ் அமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் முடிவை மதித்து, பிரசாந்த் கிஷோர் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
* மபியில் காங்கிரஸ் குஜராத்தில் பாஜ
மத்தியப் பிரதேசத்தின் தாடியா தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர பார்திக்கு மோசடி வழக்கில் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. அதனால் அங்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்ஷ்யாம் சிங்கும், பா.ஜ சார்பில் அசுதோஷ் திவாரியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் வெற்றி பெற்றார். நீண்ட கால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மூத்த பாஜ எம்எல்ஏவும் முன்னாள் குஜராத் அமைச்சருமான யோகேஷ் படேல் ஜூன் மாதத்தில் காலமானதைத் தொடர்ந்து குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மஞ்சல்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. பாஜ வேட்பாளர் சதீஷ் கோவிந்த்பாய் படேல் வெற்றி பெற்று அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். அவர் தனது காங்கிரஸ் போட்டியாளரும் முன்னாள் அமைச்சருமான பிகாபாய் ரபாரியை 30,630 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
