தவெகவில் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சபாநாயகரிடம் அதிமுக மீண்டும் வலியுறுத்தல்

 

சென்னை: தவெகவில் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), பி.சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகிய 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக இணைந்தனர்.

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு குதிரை பேரம் மூலம் ஆளுங்கட்சியில் சேர்ந்தவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சார்பில் மனு அளித்து, உரிய நடவடக்கை எடுக்க வலியுறுத்தி வந்தோம். அந்த புகார் மனு​வின் மீது சில விளக்​கங்​களை சபாநாயகர் கேட்டிருந்தார்.

ஏற்கனவே 3 முறை சபாநாயகருக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், சபாநாயகரை மீண்டும் சந்தித்து, ஏற்கனவே ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் கொடுத்த விளக்கங்களை கேட்டிருந்தோம். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது எங்களுக்கு தெரிந்தால்தான், அதற்குரிய பதிலை நாங்கள் சபாநாகருக்கு மீண்டும் தெரிவிக்க முடியும் என்ற அடிப்படையில் இன்று (நேற்று) சந்தித்து கேட்டிருக்கிறேன். சபாநாயகர் தருவதாக கூறியிருக்கிறார். நாங்கள் கேட்ட விவரங்களை அவர்கள் தந்த பின், பொதுச்செயலாளர் உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: