தாம்பரம், ஜூலை 27: தாம்பரத்தில் குடிபோதையில் தூங்கியபோது மர்மமான முறையில் தனியார் நிறுவன காவலாளி தலையில் காயத்துடன் இறந்து கிடந்ததையடுத்து, அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். தாம்பரம் ஜிஎஸ்டி சாலை கடப்பேரி நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியன் (62). இவர் தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் அருகேயுள்ள மற்றொரு நிறுவனத்தின் கார் பார்க்கிங் பகுதியில் மதுபோதையில் விழுந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் காவலாளி, முனியன் வேலை செய்யும் நிறுவனத்தின் மற்றொரு காவலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவலாளி, முனியனின் செல்போனை மட்டும் எடுத்துகொண்டு காலையில் கொடுத்து விடலாம் என இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்றபோது, தலையில் பலத்த காயத்துடன் முனியன் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக காவலாளி, இதுகுறித்து போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் போலீசார், முனியனை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு முனியன் இறந்தாரா? அல்லது கார் பார்க்கிங் பகுதியில் மதுபோதையில் விழுந்திருந்தபோது கார் மோதி இறந்தாரா? யாராவது அடித்து கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
