தற்காலிக ஊழியர்கள் நியமனத்தை தவிர்த்து தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: நீதித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்ட நீதித் துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுருக்கெழுத்தர், தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள் பணிநிரந்தரம் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம வாய்ப்பு உரிமையை நீரத்துப்போகச் செய்தால் சட்டவிரோத, முறைகேடான மற்றும் பின்வாசல் நியமனங்களை ஊக்குவித்தது போல் ஆகிவிடும். படித்த விண்ணப்பதாரர்களின் உரிமைகள் பாதிக்கப்படும்.

தற்காலிக நியமனம் தான் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, அதை ஏற்றுக்கொண்டு பணியில் சேர்ந்த நிலையில் தற்போது பணி நிரந்தரம் கோர முடியாது. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்தந்த பணிகளுக்கான தேர்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதி அளிக்கலாம். கால வரம்பில்லாமல் தற்காலிக நியமனங்களை தொடர அனுமதிக்க முடியாது என்பதால் தற்காலிக நியமனங்களை தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடைமுறைகளை நீதித்துறை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: