டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராக நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு போராட்டம் நடைபெற்றது. நீட் போராட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன், அருண் மாதேஸ்வரன், லெனின் பாரதி, பாடகர் அறிவு, நடிகர் கலையரசன், கலையரசன், மன்சூர் அலிகான், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகைகள் ரேவதி, ஆண்ட்ரியா, சுஹாசினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்; மாணவர்கள் ஒரு போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம்; மாணவர் போராட்டம் என்பது அரசின் தோல்வி நீட் மூலம் நமது மருத்துவ அறிவை பறிக்க பார்க்கிறார்கள்; நீட்டிற்கு எதிரான போராட்டத்தில் செயற்பாட்டாளர்களுடன் துணை நிற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் ஒன்றிய அரசின் தோல்வி. நீட் தேர்வால் ஏற்படும் அழுத்தத்தை நான் கண்கூடாக பார்த்தேன். நீட் தேர்வின் மூலமாக நம்மிடம் இருந்து மருத்துவக் கல்வியை முழுமையாக எடுக்கப் பார்க்கிறார்கள். மீண்டும் நம்மை அவர்களிடம் கைகட்டி நிற்க வைக்க முயற்சிக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசுகையில்; நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்; நம் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எல்லா அரசுகளும் எதிர்த்தன. ஆனால் சிறு அசைவும் ஏற்படவில்லை ஆனால், ஒரு இளைஞனின் போராட்டத்தால் ஒன்றிய அரசு கலங்கிப் போய், குழம்பிப் போய் நிற்கிறது. அதனால் மக்கள் எழுந்தால் தான் மாற்றம் உண்டாகும். இளைஞர்கள் எழுந்தால் இருமடங்காக மாற்றம் வரும் என்று கூறினார்.
நடிகை ரேவதி பேசியதாவது; நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கதறுகிறார்கள். ஜூலை 20ம் தேதி முதல் நடக்கும் சம்பவங்களை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உண்ணாவிரதம் இருக்க வேண்டிய சூழலில் நாட்டின் நிலைமை உள்ளது. நாங்கள் என்ன தவறு செய்தோம் என போலீசாரிடம் மாணவர்கள் திரும்பக் கேட்கிறார்கள். மாணவியை காவல்துறை அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைகிறார். நாங்கள் என்ன தவறு செய்தோம் என போலீசாரிடம் மாணவர்கள் திரும்பக் கேட்கிறார்கள். டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் அந்தக் காட்சிகளை பார்த்ததும் என்னால் பொறுக்க முடியல என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில்; நீட் தேர்வுக்கு எதிராக 10 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். அனிதாவின் மரணத்தில் தொடங்கிய ஓலம் இன்று வரை நிற்கவே இல்லை. அனிதா வீட்டுக்கு மறைமுகமாக செல்வார்கள், ஆனால் தீர்வு தர மாட்டார்கள். கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை விஜய் இழுத்துச் சென்றார். போராடினால் அடிக்கிறார்கள், போராடுபவர்கள் என்ன கலவரக்காரர்களா? மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகிறார்கள்; மாணவர்கள் என்ன தவறு செய்தனர்? யார் பெற்ற பிள்ளையோ என்று நினைத்துதானே அடிக்கிறீர்கள். பெண் பிள்ளைகளை தாக்குபவர்கள்தான் பாரத மாதா பற்றி பாடம் எடுக்கிறார்கள்.
எப்போதும் போராட்டம் நடத்துபவர்கள் நிராயுதபாணிகளாகவே உள்ளனர். போராட்டத்தை தடுக்க வரும் போலீசார்தான் தடி, கண்ணீர் புகை குண்டு, கவசம் என எடுத்து வருகிறார்கள். கேரளத்தில் இளைஞர்கள் போராட்டத்தை ஒடுக்கும் காங். அரசு, டெல்லியில் போராடுகிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது; இதேவேளையில் அங்கே ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் இதைவிட பெரிய கூட்டமாக இருக்கலாம்; ஆனால் இந்தக் கூட்டம் அவர்களைவிட அறிவார்ந்தக் கூட்டம் என்று கூறினார்.
