சென்னை: டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் தி.நகரில் நாளை பொதுக்கூட்டம் நடக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து, அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கண்டனங்களை தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்கள் மீதும் கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட மக்கள் விரோத மோடி அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் சென்னை, தி.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் முத்துரங்கம் சாலையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மதிமுக சார் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், விசிக சார்பில் வன்னி அரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெங்கடேசன் எம்.பி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார்கள்.
கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழாடு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விளக்க உரை ஆற்றுகிறார். மேலும், கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார, சர்க்கிள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
