மோடி அரசு இளைஞர்களையும், விவசாயிகளையும் கண்டு ஏன் அஞ்சுகிறது? திரிணாமுல் காங்., கேள்வி

டெல்லி: ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகரிகா கோஷ், மாணவர்கள் மீது மோடி அரசு கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று சாடினார்.

நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாலும், இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாலும் தான் இளைஞர்கள் தலைநகரில் போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் காரணம் எதுவுமில்லாமல் போராடுவது போல நீங்கள் அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துகிறீர்கள்.. நீங்கள் என்ன மாதிரியான ஆட்சி நடத்துகிறீர்கள்.

தங்கள் உரிமைக்காக விவசாயிகள் போராடிய போதும் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினீர்கள், அவர்களை ‘கலிஸ்தானிகள்’ என்றும் முத்திரை குத்தினீர்கள். பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராடியபோது அவர்களுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தங்களது உரிமைகள் போராடும் இளைஞர்கள், பெண் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் விவசாயிகளைக் கண்டு மோடி அரசு ஏன் அஞ்சுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

நீங்கள் இளைஞர்களிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மாணவர்களுக்கு எதிராக அடக்குமுறையை பயன்படுத்த கூடாது என குரல் கொடுக்க நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இந்த சூழலில் தர்மேந்திர பிரதான் ஏன் பதவி விலகவில்லை..? கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி மூலம் இந்தப் பிரச்சினை தீராது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். மாணவர்களை நீங்கள் கையாளும் விதமே, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ஒரு தோல்வியடைந்த அரசு என்பதையே காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

 

Related Stories: