நீட் வினாத்தாள் கசிவு, ஒன்றிய அமைச்சர் பதவி விலக கோரி தொடர் போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தரில் நள்ளிரவில் மீண்டும் வன்முறை

 

* போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி
* கண்ணீர் புகை குண்டு வீசியதால் பரபரப்பு

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் மீண்டும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கல்வியாளர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர், கடந்த 18ம் தேதி டெல்லி போலீசாரால் வலுகட்டாயமாக தூக்கி செல்லபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி நடத்தினர். அந்த பேரணியை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 60 பேர் காயமடைந்தனர். குறிப்பாக இளம்பெண் ஒருவர் வென்டிலேட்டர் சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டது. அவர் உடல்நிலை தற்போது சீரடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதாகி விடுதலையானார்கள்.

இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து வரும் சூழலில், அருகில் உள்ள சன்சத் மார்க் மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் நேற்றிரவு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. சன்சத் மார்க்கில் உள்ள பார்க் ஓட்டல் அருகே திரண்ட போராட்டக்காரர்கள், கட்டுப்பாட்டை மீறி சென்றதால், கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். இதில் கோபமடைந்த போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், கனாட் பிளேஸ் பிரதான சாலை வரை அவர்களை துரத்தினர். இந்த வன்முறையில் 2 உதவி ஆணையர்கள், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் என மொத்தம் 5 போலீசார் காயம் அடைந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பதற்றத்தை தணிக்க மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. அரசின் உத்தரவுப்படி, ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இணைய சேவைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. நாடளுமன்றம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே மத்திய படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் வன்முறையாக மாறுவதை தடுக்க, போலீசாரின் பஸ்களின் மீது சிஜேபி அமைப்பின் தன்னார்வலர்கள் ஏறி நின்று ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். மேலும், போராட்டம் நடக்கும் பாதைகளில் கிடந்த கற்களை போராட்டக்காரர்கள் எடுத்து வீசாதவாறு, சிஜேபி தொண்டர்களே சாலைகளில் கிடந்த கற்களை அகற்றினர்.

இதற்கிடையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார். இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதால், போராட்டக்காரர்கள் மீது மீண்டும் அடக்குமுறையை ஏவ போலீசார் திட்டமிட்டு இருக்கிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மெட்ரோ சேவைகள் இன்றும் முடக்கப்பட்டிருந்தன. ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற எல்லை பகுதிகளில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பிற நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சல்மான்கான் ஆதரவு
மாணவர்களின் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டத்தில், “அமைதியான முறையில்” பங்கேற்ற மாணவர்களை பாராட்டிய சல்மான் கான், அவர்களை “தைரியமானவர்கள் மற்றும் துணிச்சலானவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட பழைய, தெளிவற்ற புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து “தேர்வு வினாத்தாள் கசிவு என்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்னை. இது மிகவும் அமைதியான ஒரு போராட்டமாக இருந்தது; பின்னர் வன்முறையாக மாறியது மிகுந்த வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வினாத்தாள் கசிவு என்பது மிக முக்கியமான ஒரு பிரச்னை; சிறந்த கல்வி முறைக்காக நம் நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதையும், அதற்கு அவர்களது பெற்றோர்கள் ஆதரவளிப்பதையும் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடினமாகப் படித்து தங்கள் எதிர்காலத்தையும், சிறந்த மற்றும் கல்வியறிவு மிக்க இந்தியாவையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டை மனதார பாராட்டுகிறேன். இத்தகைய போராட்டமே இதற்கான சரியான வழியாகும். மாணவர்கள் இதனை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது மிகவும் துணிச்சலான செயலாகும். கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்தத் தலைமுறை இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும், என குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் மீது வழக்கு பாயாது என்றால் உண்ணாவிரதத்தை கைவிட தயார்; வாங்சுக்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது எந்தவிதமான வன்முறையோ அல்லது காவல்துறையின் பலப்பிரயோகமோ மேற்கொள்ளப்படாது என்றும், அவர்கள் மீது எந்தவிதமான வழக்குகளோ அல்லது தண்டனை நடவடிக்கைகளோ எடுக்கப்படாது என்றும் மத்திய அரசு உறுதியளித்தால், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், போலீசாரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உடல்நலிவுற்ற நிலையில் காணப்பட்ட வாங்சுக் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட காணொளி செய்தியில், ‘நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். இது எனது உண்ணாவிரதத்தின் 25வது நாள். சுமார் 11 கிலோ எடையை இழந்து விட்டேன்; தசை வலிமையும் குறைந்துள்ளது. ஆனால் நான் நலமாகவே இருக்கிறேன். நான் எனது பணிகளை தொடங்க விரும்புகிறேன்; ஆனால் மாணவர்கள் மீது மீண்டும் வன்முறையை பிரயோகிக்கவோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளையோ அல்லது வழக்குகளையோ பதிவு செய்யவோ வேண்டாம் என்று அரசிடம் கேட்டு கொள்கிறேன். அதற்கான உறுதிமொழி எனக்கு தேவை. அந்த உறுதிமொழி கிடைத்தால், நான் இன்றே எனது உண்ணாவிரதத்தை முடித்து கொள்வேன். இல்லையெனில், அதை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்’ என்று கூறினார்.

நடிகை ஆயிஷாகான் கைது
மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில், மும்பை தாதர் பகுதியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற துரந்தர் பட நடிகை ஆயிஷா கானை போலீசார் தடுத்து நிறுத்தி வேனில் ஏற்றினர். காவல்துறை வாகனத்தில் இருந்தபடியே காணொளியை பகிர்ந்த ஆயிஷா கான், “என் கைகள் இப்போது நடுங்கி கொண்டிருக்கின்றன. தான் போராட்டத்தில் கலந்துகொண்டு எந்தவொரு முழக்கங்களையும் எழுப்பவில்லை. சாலையோரம் அமைதியாக நின்றிருந்தபோது, 4 முதல் 5 பெண் போலீசார் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வேனில் ஏற்றினர். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை; போராட்டத்தை தொடங்கியதும் நானல்ல. எனது சகோதரரும், நண்பர்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் மட்டுமே நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன்’ என்று கூறியுள்ளார். மும்பை வொர்லி மற்றும் ரஃபி அகமது கித்வாய் காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆயிஷா கான், சில மணி நேர காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு: பிரதமர்
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறெதுவும் இல்லை. தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.

உங்கள் உடல் நலம்தான் எங்களுக்கு முக்கியம்
இந்த போராட்டத்துக்கு இடையே சமூக ஆர்வலர் வாங்சுக்கிற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘உங்களின் தியாகம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. போராட்டத்தை விட உங்கள் உடல்நலன்தான் எங்களுக்கு முக்கியம். எனவே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளது.

Related Stories: