புழல் கதிர்வேடு பகுதியில் குப்பை வண்டிகளை நிறுத்தும் இடமாக மாறும் பூங்காக்கள்: போராட்டம் நடத்த மக்கள் முடிவு

புழல், மார்ச் 16: புழல் கதிர்வேடு பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.

புழல் கதிர்வேடு 25வது வார்டில் சீனிவாச நகர், பாபுஜி நகர், அம்பேத்கர் நகர், ரங்கா அவென்யூ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. இதில், சீனிவாச நகர் பகுதியில், மதுரவாயல் - புழல் பைபாஸ் சாலை மற்றும் சர்வீஸ் சாலை அருகே பூங்கா அமைக்க அரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கான அறிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி குப்பை வண்டிகளை நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடியிருப்பு பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணியை அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள்.

இதனால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விளையாடவும், நடைபயிற்சி செய்யவும் முடியாமல் உள்ளனர். பூங்காவுக்கு இடம் உள்ளது என்பதால்தான் இந்த பகுதியில் வீட்டு மனை வாங்கினோம். ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க கோரி, மண்டல மற்றும் வார்டு அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை வண்டிகளை நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படவில்லை என்றால் மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.’’ என்றனர். இதேபோல், புழல் கண்ணப்பசாமி நகரில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டியுள்ளனர். மேலும் பல இடங்களில் உள்ள சுடுகாடு மற்றும் பூங்காக்களை ஆக்கிரமித்து குப்பை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். இதனால், அந்தந்த பகுதி மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: