×

மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டம் இணையதளம் மூலம் ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் தகவல் பதிவேற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னை: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், இணையதளம் மூலம் ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் தங்களது சுயவிபரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி மட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இது அமைகிறது. கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, வீட்டு வசதி, சமூக பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என அரசின் அனைத்து திட்டங்களையும் சரியாக திட்டமிடுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தகவல்கள் தான் அடிப்படையாக அமைகின்றது. அதனால், ஒவ்வொரு குடும்பமும் சரியான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியமாகும்.

இந்தியாவில் முதல்முறையாக, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும். அதற்கு முன்பாக, 2026 ஜூலை 17 முதல்(நேற்று முன்தினம்) ஜூலை 31 வரை, முதன்முறையாக சுயக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக தாங்களே https://se.census.gov.in என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்டப்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கலாம். தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.

சென்னையில் முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 16922 குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே, சென்னையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுயக் கணக்கெடுப்பிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்
தாம்பரம் மாநகராட்சியில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027ன் (வீடு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு) முதல் கட்டமான ‘சுய கணக்கெடுப்பு’ பணி கடந்த 17ம் தேதி தொடங்கியுள்ளதாக ஆணையரும், முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியுமான எஸ்.பாலச்சந்தர் அறிவித்தார். மாநகராட்சி பகுதியில் இப்பணியை ஒருங்கிணைக்க 1,483 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 243 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான இத்தகவல் சேகரிப்பு பணிக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறான தகவல்களை அளிப்பது இப்பணியை தடுப்பதற்கு சமமானதாகும், இது தண்டனைக்குரிய குற்றமாகும். தவறான பதில்களை அளித்தல், அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தல், வீடுகளில் ஒட்டப்பட்ட குறியீடுகளை அகற்றுதல் மற்றும் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யாமல் இருத்தல் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படும்.

கணக்கெடுப்பு பணிக்காக கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் நிலங்களை விடுவிக்குமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை மீறினால், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம் என்று ஆணையர் தெரிவித்தார்.

2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் ஜூலை 17, 2026 முதல் தங்கள் வீட்டு விவரங்களை தாங்களே பதிவு செய்துகொள்ளலாம். இந்த விவரங்களை ஜூலை 31, 2026 வரை இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம். https://se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம், அலைபேசி அல்லது கணினியை பயன்படுத்தி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, 11 இலக்கக் குறியீடு ஒன்று குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும். இந்த குறியீட்டை, வீட்டிற்கு வருகை தரும் கணக்கெடுப்புப் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Chennai Municipal Corporation ,Chennai Municipality ,
× RELATED சோழிங்கநல்லூர் அருகே பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து