அண்ணாநகர்: சென்னை திருமங்கலம், வெல்கம் காலனி முதல் தெருவில் ஒரு தனியார் ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 15 நாட்களுக்கு முன் சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இப்புகாரின்பேரில், அந்த கடைக்கு கடந்த 6ம் தேதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், அக்கடையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் அதன் பிளேவர்களின் மாதிரிகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேகரித்து, ஆய்வுக்கூட பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இந்த ஆய்வு முடிவில், அந்த ஐஸ்கிரீம் கடையில் விற்பனை செய்யப்பட்ட பல்வகை பிளேவர் ஐஸ்கிரீம்களில் மதுபானம் கலந்திருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து, திருமங்கலத்தில் உள்ள தனியார் ஐஸ்கிரீம் கடைக்கு நேற்று மாலை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று பூட்டி சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
