×

பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட காய்கறி வாரச்சந்தை கட்டடத்தை திறப்பதற்கு காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வாரச் சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச்சந்தை கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரூபாய் 2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியதால், கடந்த 1 வருடமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை இயங்கி வந்தது. தனியார் இடத்தில் பெரும் தொகையை செலவு செய்து சிறு, சிறு வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்தது.

இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட பேராவூரணி வாரச்சந்தை பேரூராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் இடத்தில் நடத்தப்பட்டு வந்த வாரச்சந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் சந்தைக்கு வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகள் வந்த நிலையில், தனியார் இடத்தில் நடத்தப்பட்டு வந்த வாரச்சந்தையும் நிறுத்தப்பட்டுள்ளதை கண்ட வியாபாரிகள், புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையும் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையும் திறக்கப்படவில்லை.‌

இதனால் செய்வதறியாமல் ஆத்திரமடைந்த வியாபாரிகள் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையை திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து வாரச்சந்தை அருகே உள்ள பேருந்து நிலைய வாயிலில் சாலையின் இருபுறமும் காய்கறிகளை கொட்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி தாசில்தார் பாலசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய வியாபாரிகள், புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையை உடனடியாக திறக்க வேண்டும், எங்களுக்கு உரிய முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்து தரவேண்டும், மேலும் சம்மந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் இங்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

வெகுநேரமாகியும் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் புதுப்பிக்கப்பட்டுள்ள காய்கறி வாரச்சந்தை கட்டடத்தை தன்னிச்சையாக திறந்து வியாபாரம் செய்ய கடைகளை தேடிப் பிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Peravurani ,Warachanda ,Peravurachi ,
× RELATED அமைச்சர்-மா.செ. மோதலால் தவெக...