×

வியாபாரி கொலை வழக்கில் சிக்கிய 8 கைதிகள் பாளை சிறைக்கு மாற்றம்: காவலில் எடுக்க போலீஸ் திட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் சிறைக்குள் நடந்த கொலையில் சிக்கிய 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்வர் சபரிவர்மன் (34). இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவியும், ஒரு மகனும் உண்டு. சபரிவர்மன் தனது வீட்டு அருகில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 9ம் தேதி இவரது கடையில் இருந்து 14 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்த தென்தாமரைக்குளம் போலீசார், வழக்குபதிவு செய்து நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 13ம் தேதி அதிகாலையில் சிறைக்குள் வைத்து சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்குபதிவு செய்து சிறை வார்டன் ெஜகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் 8 கைதிகள் என 11 பேரை கைது செய்தனர். 5நாட்களுக்கு பின், கடந்த 17ம் தேதி சபரிவர்மன் உடலை, உறவினர்கள் பெற்று தகனம் செய்தனர். சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை, 2 சென்ட் நிலம், ரூ.10 லட்சம் நிவாரணம், மகனின் படிப்புக்கான வைப்பு தொகை ஆகியவை நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபரிவர்மன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறைக்குள் இருந்த கைதிகள் விஷ்ணு (21), சாரதி (19), சரத் (20), வீரிய பெருமாள் (36), சேதுராம் (30), அஜித் (29), அரவிந்த் (27) ஆகிய 8 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் கைதிகள் 8 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதாகி நாங்குநேரி சிறையில் உள்ள, சிறை வார்டன் ஜெகன் உள்ளிட்டோரும் காவலில் எடுக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Palai ,Nagercoil ,Nagercoil prison ,Palaiyangottai prison ,Sabarivarman ,Eathangadu ,Suchindram ,Kumari district ,Anandavalli ,
× RELATED அமைச்சர்-மா.செ. மோதலால் தவெக...