தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் மழைநீர் வடிகால் பணிகள் வேகப்படுத்தப்படும் தூத்துக்குடி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் உறுதி

தூத்துக்குடி, மார்ச் 15:  தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், பாஜ மாவட்டத் தலைவர் பால்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதியில் தமாகா வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்டிஆர் விஜயசீலன் அறிமுகப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் பேசுகையில், ‘‘தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த  தமாக தலைவர் ஜி.கே.வாசன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணி கட்சி , நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி தொகுதியில் உள்ள 60வது வார்டுகளில் செயலாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து ஒற்றுமையோடு பணியாற்றி என்னை வெற்றி பெற செய்யவேண்டும்.

தூத்துக்குடி தொகுதி மக்கள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுத்தால் , தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விவிடி சிக்னலில் மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். மேலும் 1,2 வது ரயில்வே கேட்டுகளில் சுரங்கப்பாதை அமைப்பது, தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை வேகப்படுத்தி நிறைவு செய்ய பாடுபடுவேன்.

 தூத்துக்குடி நகரில் மழைநீர் தேங்காதவண்ணம் மழைநீர் வடிகால் பணிகள் வேகப்படுத்தப்படும். புறவழி பஸ்நிலையம் அமைக்கப்படும். ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் பயன்பெறும் வகையில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக  வெளித்துறைமுக பணிகளை விரைவுபடுத்த பாடுபடுவேன். உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் நிவாரணத்தொகை வழங்க குரல் கொடுப்பேன். மீனவர்களுக்கான நிவாரணத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க  நடவடிக்கை மேற்கொள்வேன்.

 சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக செயல்படுவேன. தூத்துக்குடி மக்களின் குறை தீர்க்க விடுமுறையே இல்லாத அலுவலகமாக இனிவரும் காலங்களில்  எம்.எல்.ஏ. அலுவலகம் செயல்படும்’’ என்றார். கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி  லாரன்ஸ், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுக நயினார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அரசு வக்கீல்கள் சேகர், செல்வகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம், அவைத்தலைவர் திருப்பாற்கடல்,  இலக்கிய அணி நடராஜன்,  இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், இளைஞர் அணி வீரபாகு, மாணவர் அணி விக்னேஷ், அமிர்தகணேசன், பாசைறை தனராஜ், தொழில்நுட்ப பிரிவு அருண்ஜெபக்குமார், நிர்வாகிகள் ஜோதிமணி, நட்டார்முத்து, பொன்ராஜ்,  பாஜ நிர்வாகிகள் சசிகலா புஷ்பா, வக்கீல் எஸ்பி.வாரியார், தமமுக லாரன்ஸ், புரட்சிபாரதம் ராஜா, பாமக மாவட்ட தலைவர் சின்னதுரை மற்றும் பெருந்தலைவர் மக்கள்கட்சி, மனித உரிமை காக்கும் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம்  உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: