கர்ப்பிணி சாவு ஆர்டிஓ அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

திருச்செந்தூர், மார்ச் 15: பரமன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேறுகாலத்தின்போது பாதிக்கப்பட்ட பெண் ரத்துபோக்கால் உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், அலட்சியமாக செயல்பட்ட சுகாதாரச் செவிலியர், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி முருகேசபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி வளர்மதி (32). தம்பதிக்கு ஏற்கனவே பவானி ஷா (6) என்ற மகள் உள்ளார். பின்னர் நிறைமாத கர்ப்பிணியான வளர்மதி, பேறுகால வலி ஏற்படவே பரமன்குறிச்சியில் செயல்படும்  ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் காலை சென்றார். அப்போது அங்கு டாக்டர் மற்றும் சுகாதாரச் செவிலியர் பணியில் இல்லாத நிலையில், சீட்டு பதிவுசெய்தவரே வளர்மதிக்கு பேறுகாலம் பார்த்ததில் சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தொடர்ந்து ஏற்பட்ட ரத்துப்போக்கால் வளர்மதி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.

இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோதும் ரத்துப்போக்கு நிற்காததால் உடனடியாக கர்ப்ப பையை ஆப்ரேஷன் செய்து டாக்டர்கள் அகற்றினர். இருப்பினும் தீவிர சிகிச்சை அளிக்க அங்கு போதிய வசதியில்லாததால் தூத்துக்குடியில் இருந்து ஆம்புலன்சை வரவழைத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வளர்மதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர்  ஏற்கனரே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், இதை கண்டித்து பரமன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த வருவாய் துறையினரும், போலீசாரும் சமரசப்படுத்தி அனுப்பிவைத்தனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட வளர்மதி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டுவந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அலட்சியமாக செயல்பட்ட சுகாதாரச் செவிலியர், டாக்டர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பரிதாபமாக உயிரிழந்த வளர்மதியை இழந்து வாடும் இருபெண் குழந்தைகள் கல்விச்செலவை அரசே ஏற்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முதலில் போராட்டம் நடத்தியவர்களை பேச்சுவார்த்தை அழைக்காததால் விரக் தியடைந்த உறவினர்கள் திருச்செந்தூர் நுழைவுவாயில் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயகுமார், தமிழக மாணவர்  இயக்கத்தின் மதன்ராஜ், பாமக மாவட்டத் தலைவர் சிவபெருமாள் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.  இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை கோட்டாட்சியர் தனப்ரியா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பிறகே அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Related Stories: