தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகள் வெட்ட விதித்த தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி: பொதுஇடங்களில் கன்றுகள், மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலர் சூர்யபிரசாந்த் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து இருந்தார். இதையடுத்து அதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, ‘‘ பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடு, கன்றுகள் பலியிடக் கூடாது. அதற்கு தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக விலங்கு நலச் சட்டங்களின்படி, தகுதியான அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட வயது முதிர்ந்த அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகளை மட்டுமே வெட்ட அனுமதிக்க முடியும்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என கடந்த மாதம் 27ம் தேதி தீர்பளித்து இருந்தனர். மேலும் இந்த உத்தரவானது பக்ரீத் பண்டிகையின் போது பிறப்பிக்கப்பட்டதால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விகரம்நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,” இந்த விவகாரம் தொடர்பாக எதிர்மனுதாரர் சூர்யபிரசாந்த், தமிழக டி.ஜி.பி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, முன்னதாக கன்றுகள் மற்றும் மாடுகளை வெட்ட தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: