பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல் பார்வை திறனாளர்களுக்கு ப்ரெய்லி புத்தகம் விநியோகம்

பெரம்பலூர், ஜூலை 14: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 23 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ரூ1.78 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி நேற்று வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தப் பட்டு, 77 மாற்றுத்திறனுடைய சிறப்பு குழந்தைகளுக்கு அலிம்கோ நிறுவனத்திடம் இருந்து உதவி உபகரணங்கள் பெறப்பட்டது. அதனடிப்படையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்டமாக சிறப்பு சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி, செவித்துணைக்கருவி, ப்ரெய்லி கிட், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சி சாதனம் என 23 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ரூ1.78 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்டக் கலெக்டர் வழங்கினார். மேலும் பார்வைத் திறன் குறைபாடுகள் உடைய மாணவர்களுக்கு ப்ரெய்லி புத்தகம் வழங்கப்பட்டது. ப்ரெய்லி எழுத்துக்களை வாசித்து காண்பித்த மாணவி ஜெசிகாவை மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சதாசிவம் (இடைநிலை), வேலு (தொடக்கக் கல்வி). தலதா (தனியார் பள்ளிகள்), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித்திட்ட அலுவலர் வெங்கடேசன், மாவட்டக் கலெக்டரின் நேர்முக எழுத்தர் (கல்வித்துறை) குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வட்டார உள்ளடக்கி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: