சென்னை: பெரம்பூரில் நடந்த எம்எல்ஏ அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் வெற்றிக்கு பின் 2 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக அதிகாரபூர்வமாக பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் நேற்று மாலை வந்தார்.
சர்மா நகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை திறந்து வைத்தார். பின்னர், ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதோடு, பெரம்பூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். இதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக நடந்து சென்று மக்களை சந்தித்தார்.மேலும், தொகுதி சார்ந்த புகார்களை தெரிவிக்க பிரத்யேக செயலி ஒன்றையும் அவர் அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம், பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற குறைகளை நேரடியாகப் பதிவு செய்யலாம். மேலும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அதன் தகுதிகள் குறித்த விவரங்களை மக்கள் எளிதில் அறிந்துக் கொள்ளவும், தங்களின் புகார்களின் தற்போதைய நிலையை போன் மூலமாகவே கண்காணித்துக் கொள்ளவும் இந்த செயலி வழிவகை செய்கிறது.
இதையடுத்து முதல்வர் விஜய் வியாசர்பாடி மேற்கு அவென்யூ சாலை மாநகர போக்குவரத்து கழகத்தின் மின்சார பேருந்து பணிமனையில் உள்ள மின்னேற்ற நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, தமிழன் பார்த்திபன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பெரம்பூர் தொகுதி பொறுப்பாளர் சிவா, கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, சர்மா நகர் 10வது தெருவில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாய விலை கடையை முதல்வர் விஜய் பார்வையிட்டு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் 73 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 50 பேருக்கு புதிய அட்டைகளை வழங்கி 10 பேருக்கு ரேஷன் பொருட்களை முதல்வர் விஜய் வழங்கினார். பின்னர், நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் வெங்கட்ரமணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 2 வாரங்களில் அனைத்து ரேஷன் கார்டுகளும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு தாயுமானவன் திட்டம் மூலம் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறோம். பட்ஜெட்டில் அறிவித்த பிறகு அனைத்து வீடுகளுக்கும் சென்று ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். ஒரு மாதத்திற்குள் அனைத்து பொருட்களும் தரமாக கிடைக்கும். தற்போது, நிலுவையில் உள்ள அனைத்து அட்டைகளையும் விரைந்து வழங்கப்படும். விரைவில் கண் ரேகை மூலமும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்,’ என்றார்.
