மேலூர் அருகே அதிகாலை பரிதாபம்; அரசு பஸ் மீது தனியார் பஸ் பயங்கர மோதல்; 6 பேர் பலி: குழந்தைகள் உட்பட 50 பேர் காயம்

 

மேலூர்: மேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், அரசு பஸ் மீது மோதிய விபத்தில் பெண் உட்பட 6 பேர் பலியாயினர். குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ்(43) ஓட்டினார். வஞ்சிநகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், சாலையின் சென்டர்மீடியனை தாண்டி, எதிர்புறம் மதுரையில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அரசு பஸ் நிலைதடுமாறி 3 முறை உருண்டு சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அரசு பஸ் டிரைவரான திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஜோதி(49) மற்றும் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி இடைமலைபேட்டையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஆனந்தராஜ் (46), ரயில்வே போலீஸ்காரர் சூர்யா (29), திருவாரூர் அருகே கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது யாசின்(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசு பஸ் மீது மோதிய ஆம்னி பஸ், மீண்டும் சாலையின் மறுபுறம் சென்று அருகே இருந்த வஞ்சிநகரம் பஸ் நிழற்குடை மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.

இதில், பஸ் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து, ஆம்னி பஸ்சின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கியது. இதில் நிழற்குடையில் படுத்திருந்த வஞ்சிநகரத்தை சேர்ந்த பெருமாள்(68), ஆம்னி பஸ்சில் இருந்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிறிய புஷ்பம் (56), திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த ஆபிரகாம்(40) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவ உதவி குழுவினருடன் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், எஸ்பி தேவநாதன் ஆகியோர் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டனர்.

அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்து காரணமாக பெண்கள் உட்பட 6 பேர் உயிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அதனை சீரமைத்து வாகனங்கள் செல்வதற்கு உதவினர். இரு பஸ்கள் மோதிய இந்த விபத்தில் மேலூர் அரசு மருத்துவமனையில் 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். பலத்த காயமடைந்த 7 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் விஜய் உத்தரவு
முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பஸ்கள் மோதலில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 7 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 15 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

Related Stories: