அரசுதுறை பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் அரசே ஏற்று நடத்த வேண்டும்

நாகப்பட்டினம், ஜூலை13: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ லதா தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வாசு நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலச் செயலாளர் பழனிவேலு சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

எழுபது வயது முடிந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணம் இல்லா மருத்துவ சிகிச்சை முறையை மாற்றி பேக்கேஜ் சிஸ்டம் கொண்டு வந்துள்ளதை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். கார்ப்பரேட்டுகள் மட்டும் பயன் அடையும் வகையில் இருக்கின்ற இப்போதைய திட்டத்தை கைவிட்டு அரசே காப்பீட்டு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், டெல்டா விவசாயிகளின் உயிர்நாடியான காவிரியை பாதுகாக்கும் விதமாக மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் தடுத்த நிறுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிபடி விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய மாவட்ட செயலாளராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். நாகப்பட்டினம் வட்டச் செயலாளர் மாரிமுத்து அஞ்சலி தீர்மானம் வாசித்தார். நாகப்பட்டினம் வட்ட தலைவர் ராஜூ வரவேற்றார். நாகப்பட்டினம் வட்ட பொருளாளர் பாபுராஜ் நன்றி கூறினார்.

Related Stories: