தொடர் வறட்சியால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு அபாயம்

தேவதானப்பட்டி, ஜூலை 13: தேவதானப்பட்டி பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவிவருவதால் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி பகுதியில், தேவதானப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, மஞ்சளாறு அணை கிராமம், சாத்தாகோவில்பட்டி, செங்குளத்துப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, வைகைபுதூர், வரதராஜ்நகர், ஜெயமங்கலம், மேலக்காமக்காபட்டி, கீழக்காமக்காபட்டி, மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, வேல்நகர், தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி, உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் பருவமழை பொய்த்து தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை நிரம்பாமல் முதல் போகம் நெல் சாகுபடி நடைபெறவில்லை. இந்த பகுதியில் கோடை மழையும் சரிவர பெய்யவில்லை. தற்போது தென்மேற்கு பருவமழையின் சாரல் மழையும் சரிவர பெய்யவில்லை. இந்த பகுதியில் கறவை மாடுகள், எருமை மாடுகள், கிடை மாடுகள், வெள்ளாடு, செம்மறியாடு என ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மற்ற கால்நடைகளுக்கு வறட்சி தீவனமாக வைக்கோல், காய்ந்த சோளத்தட்டை இவற்றை தீவனமாக பயன்படுத்தி வறட்சியில் இருந்து கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்து சமாளிக்க முடியும். ஆனால் பால் கறக்கும் கறவை மாடுகளை பொருத்தமட்டில் தினந்தோறும பசுந்தீவனம் கொடுத்தால் தான் போதிய பால் கறக்க முடியும். இந்த பகுதியில் கறவை மாடுகள் வளர்ப்பு அதிகப்படியாக உள்ள நிலையில் தற்போது நிலவிவரும் வறட்சி சூழலால் பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டால் பால் உற்பத்தி பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் கறவை மாடுகள் வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: