திண்டுக்கல், ஜூலை 13: மேற்கு வங்கத்தில் இருந்து திண்டுக்கல் வந்த ரயிலில், கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். திண்டுக்கல்லில் இருப்புப்பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயா பிரிட்டா உத்தரவின் பேரில் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்களில் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேற்குவங்க மாநிலம் புருலியாவில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலிலின் பின் பகுதியில் இருந்த பொதுப்பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.
சந்தேகத்தின் பேரில் அந்தப் பையை எடுத்து பார்த்த போது, 8.300 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து திண்டுக்கல் இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
