மேட்டூர், ஜூலை 10: மேட்டூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எம்எல்ஏ சமரசப்படுத்தினார். சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி பெரியார் நகர், தங்கமாபுரிபட்டணம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும்போது, 16 கண் மதகில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் இப்பகுதியில் பெருக்கெடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே அப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனை கண்டித்து நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மேட்டூர்- சேலம் சாலையில் திரண்டனர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு மறியல் போராட்டத்தில் குதித்தனர். பிரதான சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
