எம்பாப்பேவை திட்டி தீர்க்கும் பராகுவே பெண் எம்.பி

பராகுவே அணியுடனான ரவுண்ட் ஆப் 16 போட்டியில், கேப்டன் கிலியன் எம்பாப்பே அடித்த பெனால்டி கோலால் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. பிலடெல்பியா அரங்கில் நடந்த அந்த போட்டி முடிந்ததும் கிலியன் எம்பாப்பே உடன் கை குலுக்குவதற்காக தனது கையை நீட்டினார் பராகுவே கோல் கீப்பர் ஆர்லாண்டோ கில். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த எம்பாப்பே தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடுவதிலேயே கவனமாக இருந்தார். இதனால் கடுப்பான கில், பந்தை எம்பாப்பே பின்புறமாக எறிந்துவிட்டு களத்தில் இருந்து கிளம்பினார்.

இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கீப்பர் கில்லுக்கு ஆதரவாக பராகுவே பெண் எம்.பி செலஸ்டி அமரில்லா குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அமரில்லா எம்பாப்பே இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ‘அமரில்லா ஒரு இழிவான பெண், அவர் வகிக்கும் பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர்’ என்று எம்பாப்பே போட்டுத் தாக்க, ஏகத்துக்கு கடுப்பான அமரில்லா மேலவையில் பேசும்போது எம்பாப்பே தாயை இழிவுபடுத்தும் வகையில் கடும்சொல்லை பிரயோகித்ததுடன், ’கில் ஒரு சிறுவன்.

உலக கோப்பையில் முதல் முறையாக விளையாடுகிறான், அவன் நட்புணர்வோடு நீட்டிய கையை புறக்கணிப்பது பிரான்ஸ் நாகரிகத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத செயல். உண்மையான பிரான்ஸ் குடிமகன் இப்படி நடந்துகொள்ள மாட்டான். நிறவெறியுடன் எங்களை நடத்துவதை வேடிக்கை பார்க்க முடியாது. பராகுவே மக்களிடம் வம்பு வைத்துக் கொள்ளாதீர்கள். ஏற்கனவே நாங்கள் ரொனால்டினோவை தூக்கி உள்ளே வைத்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார். அமரில்லாவின் காட்டமான பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

* ரெட் கார்டு காண்பிக்கப்பட்ட அமெரிக்க வீரர் பலோகன் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்துவிட்டதாக பிபா தலைவர் கியானி இன்பான்டினோ மீது புகார் எழுந்துள்ள நிலையில், அரசியல் நடுநிலையை காக்கத் தவறிவிட்டதாக அவர் மீது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறைப்படி புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இனி உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துவிட்டாலும், தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவாரா? சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ‘எப்போதும் போர்ச்சுகல் தான்’ என அவர் தகவல் பதிந்துள்ளார்.

Related Stories: