லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா முச்சோவா தகுதி பெற்றார். அரையிறுதியில் அமெரிக்க நட்சத்திரம் கோகோ காப் (7வது ரேங்க்) உடன் நேற்று மோதிய முச்சோவா (10வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அநாயசமாக விளையாடிய கோகோ 6-1 என எளிதாக வென்று பதிலடி கொடுக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீஸ் ஆட்டங்களில் புள்ளிகளைக் குவித்து சளைக்காமல் முன்னேறியதால் இழுபறி நீடித்தது. கடும் போராட்டமாக அமைந்த டை பிரேக்கரில் அபாரமாக விளையாடிய முச்சோவா 6-2, 1-6, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 35 நிமிடங்களுக்கு நீடித்து டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மற்றொரு அரையிறுதியில் உக்ரைனின் மார்தா கோஸ்டியுக் லிண்டா நோஸ்கோவா (செக் குடியரசு) மோதுகின்றனர்.
