2 பள்ளி மாணவிகள், இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்

சென்னை: 2 பள்ளி மாணவிகள், இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த சிவியாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி நள்ளிரவில் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி போலீசார் அந்த மாணவியை நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் மீட்டனர். இதுகுறித்து மாணவியிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புங்கன்பட்டியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான தமிழரசன் (22), அவரது நண்பரான பிரதாப் (23) ஆகியோர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாணவியின் ஊருக்கு சென்ட்ரிங் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது தமிழரசனுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழரசன் அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைக்க அவர், நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி, சேலம் பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தமிழரசன், மாணவியை மேச்சேரி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நண்பர் பிரதாப்புடன் சேர்ந்து, கூட்டு பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தமிழரசன் மற்றும் பிரதாப்பை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே சித்தூரில், பெண் குழந்தைகள் தங்கி படித்து வரும் தனியார் குழந்தைகள் இல்லத்தில் வார்டனாக மெர்சி அன்னபூரணி (42) பணியாற்றி வருகிறார். இந்த இல்லத்திற்கு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜசக்திவேல் (44) அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும்போது இந்த இல்லத்தில் தங்கி அருகிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை, தனது அறைக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பேரையூர் மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜசக்திவேல், வார்டன் மெர்சி அன்னபூரணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்த 16 பெண் குழந்தைகள் வேறு முகாமிற்கு மாற்றப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்பனேரி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி முனீஸ்வரி (33). கருத்து வேறுபாடு காரணமாக, முனீஸ்வரி தனியாக வசிப்பதுடன், கட்டிட பணிகளை மேற்கொள்ளும் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே வசிக்கும் அனிதா என்பவர், மதுரை மாவட்டம் மேலூரில் வசிக்கும் மூதாட்டியை கவனித்துக்கொள்ள ஆள் தேவைப்படுவதாக முனீஸ்வரியிடம் கூறியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் மேலூருக்கு வந்த முனீஸ்வரியை சுமார் 20 வயது வாலிபர் ஒருவர் டூவீலரில் தும்பைப்பட்டி அருகே தாமரைப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த 30 வயது மதிக்கத்தக்க 4 நபர்களிடம் முனீஸ்வரியை ஒப்படைத்த வாலிபர் புறப்பட்டுச்சென்றார். அவர்கள் நால்வரும் சேர்ந்து, முனீஸ்வரியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.அவரது அரை பவுன் தங்கச்சங்கிலி, தங்க குண்டு, வெள்ளி கொலுசு, மற்றும் செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். அங்கிருந்து மேலூர் வரை முனீஸ்வரி நடந்தே சென்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: