திருப்பரங்குன்றம்: மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமாத்தூர் பகுதியில், மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையின் தனிப்பிரிவினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த கைப்பையில் சோதனையிட்டனர்.
அதில் தமிழக அரசு தடை செய்த 12 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், குட்கா கடத்தியவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியைச் சேர்ந்த, நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தவெக துணைச்செயலாளர் காசிநாதன் மற்றும் செக்கானூரணியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. அவர்கள் கடத்திய குட்கா, டூவீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
