பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில், திருப்பத்தூரை சேர்ந்த பூவரசன் (30) என்பர் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அந்த பேக்கரி உரிமையாளரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பூவரசனை கண்டித்துள்ளனர். அதன்பின், 2 மாதத்திற்கு முன்பு வேலையிலிருந்து பூவரசனை நிறுத்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடல் அருகே போதையில் பூவரசன் வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை கண்ட, பேக்கரி கடை உரிமையாளரின் இரு மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் என 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் 5 பேர் சேர்ந்து வழிமறித்து, பூவரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் பூவரசனை, அந்த 5 பேரும் சேர்ந்து அடித்து கீழே தள்ளினர். நிலை தடுமாறி கீழே விழுந்த பூவரசன், சிறிதுநேரத்தில் இறந்தார். இதையறிந்த மேற்கு ஸ்டேஷன் போலீசார், சம்பவ இடம் வந்து விரைந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பூவரசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு ஸ்டேஷன் போலீசார், பூவரசனை தாக்கிய 17 வயதுக்கு உட்பட்ட 5 மாணவர்களையும் நேற்று கைது செய்தனர்.
* நெல்லையில் பணம் திருட முயற்சி பூரி மாஸ்டரை கல்லால் அடித்து கொன்ற முதியவர்
நெல்லை மேலப்பாளையம் ஞானியப்பர் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம் (65). இவர் அப்பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் பூரி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நாங்குநேரியை பூர்வீகமாகக் கொண்ட கணேசன் (எ) கணேசமூர்த்தி (60). இவரது குடும்பத்தினர் கொக்கிரகுளம் மருத்துவமனை பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால் கணேசன் குடும்பத்தினருடன் வசிக்காமல், நெல்லை மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே வீதிகளில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மேலப்பாளையத்தில் உள்ள பிரபல தியேட்டர் எதிரே உள்ள சாலையில் கணேசன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அந்த வழியாக சைக்கிளில் வந்த அப்துல்ரகீம், தூங்கிக் கொண்டிருந்த கணேசனின் சட்டைப் பையில் இருந்து பணத்தை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த கணேசன், அப்துல் ரகீமுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரமடைந்த கணேசன், கீழே கிடந்த கல்லை எடுத்து அப்துல் ரகீமின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அப்துல் ரகீம், அங்கிருந்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து நள்ளிரவில் தப்பியோடி வேறு இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
* மதுரையில் வடமாநில ஜோதிடர் கொடூர கொலை
மதுரை கோ.புதூரை சேர்ந்தவர் ராஜா ஜெய்சிங் (55). வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், ஜோதிட தொழில் செய்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயுடன் தனியாக வசித்து வந்தார். இவர் நேற்று காலை கொடிக்குளம் குருவி ஓடை பகுதியில் கல்லால் அடித்தும், கத்தியால் கொடூரமாக வெட்டியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது சடலத்தை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக கே.புதூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தின் அருகே காலி மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் நள்ளிரவில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கொலையான ராஜா ஜெய்சிங், வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தப் பகுதியில் பொம்மை விற்பனை செய்து வரும் மற்ற வடமாநிலத் தொழிலாளர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
