சென்னை: ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நேற்று தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து மீண்டும் விளக்கம் அளித்தனர். அதேநேரம் எடப்பாடி ஆதரவாளரும், அதிமுக கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் தவெக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் 2 அணியாக செயல்பட்டனர்.
எஸ்.பி.வேலுமணி அணியினர் தவெக அரசுக்கு ஆதரவாகவும், எடப்பாடி அணியினர் அரசுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், அதிமுக மீண்டும் உடையும் ஆபத்து ஏற்பட்டது. பின்னர் மன்னிப்பு கடிதம் கொடுத்து இரண்டு தரப்பினரும் இணைந்தனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பில் இருந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த மே 25ம் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தாராபுரம் சத்யபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கொடுத்தனர்.
சபாநாயகர் ஏற்றுக் கொண்ட நிலையில் 3 பேரும் அன்றையதினமே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர். கடந்த மாதம் 17ம் தேதி சத்யபாமா, மரகதம் குமரவேல் மற்றும் ஜெயக்குமார் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்தனர். அப்போது தங்களது ராஜினாமா முடிவு குறித்த தெளிவான விளக்கங்களை சபாநாயகரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தவெகவில் இணைந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா நேற்று மீண்டும் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா குறித்து விளக்கினர். ஏற்கனவே மூவரும் விளக்க கடிதம் அளித்திருந்த நிலையில், அதனை தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் கோரிய நிலையில் இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், அதிமுக கொறடாவுமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று பிற்பகல் தலைமை செயலகம் சென்று சட்டப்பேரவை செயலாளர் சாந்தியை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து அவரிடம் பேரவை செயலாளர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
