சென்னை: காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், `தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் விடுவிக்கப்படுவார்’ என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதல்வர் தயாரா? என்று எடப்பாடி சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற காவிரி டிரிபியூனல் தீர்ப்பையும், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும், கர்நாடக அரசு முறையாக செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிப்பது தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி. இதை மறைத்துவிட்டு, மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை, தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சொல்வது வடிகட்டிய பொய். தமிழக மக்களின் வாழ்வோடு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விளையாடுவதை, தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது.
காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், `தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்’ என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ – ‘ஆட்சி பொறுப்பில் இருந்து தவறி, மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அந்த அறநெறியே, எமனாக (கூற்றாக) மாறி தண்டிக்கும்’ என்று தமிழக, கர்நாடக இரு ஆட்சியாளர்களையும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
