வந்தவாசி, ஜூலை 9: வந்தவாசியில் நள்ளிரவில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் சில்லரையை அரிசி பையில் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் சிவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் காளிராஜ்(45). இவர் சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்ற காளிராஜ் நேற்று காலை கடை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கடை உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணம், ரூ.10 ஆயிரம் சில்லரைகள் உள்பட ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது.
