திருவண்ணாமலை, ஜூலை 3: திருவண்ணாமலை அடி அண்ணாமலையில் அமைந்துள்ள ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உலக புகழ்பெற்றது. பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாக அமைந்திருக்கும் அண்ணாமலையார் கோயிலின் ஆதி கோயில், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அடி அண்ணாமலை உண்ணாமுலையம்மன் சமேத ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயிலாகும்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க இத்திருக்கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிறப்புக்குரியது. அதோடு, அடி அண்ணாமலையில்தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளினார். மேலும், பிரம்மதேவர் வழிபட்ட திருத்தலம் எனும் சிறப்பும் பெற்றது. பல்வேறு சிறப்புகளை கொண்ட அடி அண்ணாமலை உண்ணாமுலையம்மன் சமேத ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, கடந்த 26ம் தேதி விக்ேனஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அதைத்தொடர்ந்து, 29ம் தேதி முதல் 1ம் தேதி வரை யாகசாலை பிரவேசம், நான்கு கால யாக பூஜைகள் தொடர்ந்து நடந்தது. நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 10.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் கோயில் விமானங்களுக்கு புனித நீரூற்றி மகாகும்பாபிஷேகம், சுவாமி அம்பாள் (மூலவர்) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
விழாவை முன்னிட்டு, அடி அண்ணாமலை திருக்கோயில் மின்னொளி மற்றும் மலர் அலங்காரத்தால் ஜொலித்தது. மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று மாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், இரவு 9 மணியளவில் சுவாமி திருக்கல்யாணமும், ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
