திருவண்ணாமலை ஜூலை 6: திருவண்ணாமலையில் வக்கீல் வீட்டுக்குள் நுழைந்து 20 சவரன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை போளூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் செந்தில் வேல், வழக்கறிஞர். அவரது மனைவி கனிமொழி, பல் மருத்துவர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டு படுக்கையறையில் வக்கீல் செந்தில்குமார் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி கனிமொழி கிளினிக் சென்றிருந்தார். இதற்கிடையில் பீரோ வைத்திருந்த அறையில் பொருட்கள் சிதறி விழும் சத்தம் கேட்டு விழித்தெழுந்த செந்தில் வேல், சந்தேகப்பட்டு எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டின் வெளியே தப்பி ஓடுவது தெரிந்தது. எனவே, வெளியே சென்று பார்த்தார். அப்போது அங்கு தயாராக நிறுத்தி இருந்த பைக்கில் அந்த நபர் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிவிட்டார்.
பின்னர், வீட்டு அறைக்குள் வந்து பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 20 சவரன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் செந்தில் வேல் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சில நாட்களாக வீட்டை நோட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் ஆயுதங்களோடு வந்திருக்கலாம் எனவும், தடுக்க முயற்சித்து இருந்தால் தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் கடந்த ஒரு மாதமாக தொடர் திருட்டு நடந்து வருவதும், பட்டப்பகலில் ஆட்கள் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடி சென்றிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
