பெருந்துறையில் சொத்து தகராறில் மாமியாரை வெட்ட முயன்ற மருமகன் மீது வழக்கு

ஈரோடு : பெருந்துறையில் சொத்து தகராறில் மாமியாரை அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பெருந்துறை செல்லகவுண்டன் புதூரை சேர்ந்தவர் மனைவி சரஸ்வதி (80). இவர், பெருந்துறை டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் முத்துகிருஷ்ணன் கடந்த 2019ம் ஆண்டு இறந்து விட்டார்.

எனக்கு திருமணமான இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் கடந்த 2020ம் ஆண்டு இறந்து விட்டார். மூத்த மகள் காந்திமதி, அவரது கணவர் ராமலிங்கம் மற்றும் குழந்தைகளுடன் ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டிலும், இளைய மகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெருந்துறையிலும் வசித்து வருகின்றனர்.

எனது இரு மகள்களுக்கும் எங்களது சொத்தை சரிபாதியாக பிரித்து கொடுத்தேன். அதில், நான் வாழ்ந்து வரும் வீட்டை எனது காலத்திற்கு பிறகு பிரித்து கொள்ளவும், என்னை கடைசி வரை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டுமாறும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், எனது மூத்த மருமகன் ராமலிங்கம் மற்றும் மகள் காந்திமதி ஆகியோர் எனது பேச்சிற்கு கட்டுப்படாமல் கடந்த 2 ஆண்டுகளாக என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்லி தொந்தரவு செய்து வந்தனர்.

கடந்த மாதம் 10ம் தேதி ராமலிங்கம் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். இதையடுத்து பெருந்துறை போலீசில் புகார் அளித்ததன்பேரில், போலீசார் ராமலிங்கத்தை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால், 10 நாட்கள் மட்டும் அமைதியாக இருந்தார். கடந்த மாதம் 22ம் தேதி மூத்த மருமகன் ராமலிங்கம் என்னை வலுகட்டாயமாக வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து உணவு மட்டும் கொடுத்து, தண்ணீர் வழங்காமல் துன்புறுத்தி, வீட்டை காலி செய்யும் படி வற்புறுத்தினார்.

கடந்த 1ம் தேதி என் வீட்டிற்கு வந்த அவர், எனது சாப்பாட்டு தட்டினை பிடிங்கி வீசி விட்டு, தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை காலி செய்யகோரி அவர் எடுத்து வந்திருந்த அரிவாளை காட்டி வெட்ட வந்தார். பயந்து போன நான் படுக்கையறைக்குள் சென்று தாழிட்டு தப்பித்தேன்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் எனது வீட்டில் பொருத்திய சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. எனவே, என்னை கொலை செய்வதாக மிரட்டிய ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அதன்பேரில், பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி, ராமலிங்கம் மீது பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராமலிங்கத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: