ஒட்டன்சத்திரத்தில் இடியும் நிலையில் இருந்த ரேஷன் கடை இடமாற்றம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 11: தினகரன் செய்தி எதிரொலியாக ஒட்டன்சத்திரத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட கேகே.நகரில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பராமரிப்பின்றி செயல்பட்டு வந்த இக்கட்டிடத்தின் மேல்தளம், கீழ்தளம் மிகவும் சேதமடைந்து எந்நேரமும் விழும் தருவாயில் இருந்தது. மேலும் கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்தும், கட்டிடத்தின் மேல் மரம் வளர்ந்தும் காணப்பட்டது. இந்த அவலநிலை குறித்து கடந்த பிப்.23ல் தினகரன் நாளிதழில் பழுதடைந்த ரேஷன் கடையை இடித்து விட்டு புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் ரே:ன் கடையை அருகில் உள்ள சங்குப்பிள்ளைபுதூரில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றியுள்ளனர்.  பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சேதமடைந்த ரேஷன் கடையை மாற்ற செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றியினை தெரிவித்தனர்.

Related Stories: