குட்கா பதுக்கிய தவெக பிரமுகர் கைது: 140 கிலோ பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் பல்லடம் போலீசார் இன்று (செவ்வாய்) காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் காரை ஓட்டிவந்த நபர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சொகுசு காரை துரத்தி சென்றனர். அல்லாளபுரம் சாலையில் பாரியூர் அம்மன் நகர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த நபர் தப்பிக்க முயன்றபோது அங்கு வந்த போலீசார் அவரை பிடித்தனர்.

தொடர்ந்து காரை சோதனை செய்தபோது காரில் மூட்டை, மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த நபர் திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் தினேஷ் செபாஸ்டியன் (40) என்பதும், பாரியூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்த மளிகை வியாபாரி பெரியசாமி (30) என்பவருக்கு விற்பனைக்காக குட்கா கொண்டு வந்ததாகவும், மேலும் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு குட்கா கொடுத்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து பாரியூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்த மளிகை வியாபாரி பெரியசாமி என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அவரது வீட்டில் பாத்திரத்தில் 40 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பெரியசாமி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 40 கிலோ குட்கா மற்றும் காரில் கடத்திய 100 கிலோ குட்கா என மொத்தம் 140 கிலோ குட்காவை பல்லடம் போலீசார் பறிமுதல் செய்து, தினேஷ் செபாஸ்டியன் மற்றும் பெரியசாமியை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பெரியசாமி பல்லடத்தில் தவெக பிரமுகராக இருந்து வருவதும் தெரியவந்தது.

Related Stories: