காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மதுபோதை தகராறில் கத்தியால் குத்தி மகனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி காமாட்சி அம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (50). பூ, மாலை கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ரூபேஷ் (25). டாட்டூ கலைஞராக சென்னையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ரூபேசுக்கும், அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகன் ரூபேஷை சரமாரி குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்த ரூபேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ரூபேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தந்தை ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
