திருவொற்றியூரில் கால்வாய் அடைப்பால் தெருவில் கழிவுநீர் தேக்கம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டு, ஸ்ரீநகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள தெருவில் மழை நீர் தேங்காமல் இருக்க சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மழை நீர் கால்வாயை மண்டல அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால் கால்வாயில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டது.
மேலும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் இந்த பகுதியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் போது இந்த கால்வாயை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மழை காலத்தில் தெருவில் தேங்கும் மழைநீர் இந்த கால்வாயில் போக முடியாமல் தெருவில் தேங்கி நிற்கிறது.

அதனால் இந்த வழியாக பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து சாலையோரம் உள்ள தெருவிளக்கு மின் கம்பங்கள் மீது மழைநீர் படுவதால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மின் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் கால்வாயில் நாட்கணக்கில் தேங்கிய மழைநீர் கழிவுநீராக மாறியதால் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவொற்றியூர் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் உடனடியாக இந்த மழைநீர் கால்வாயை தூர்வாரி சீரமைத்து மழை நீர் தெருவில் தேங்காமல் தங்கு தடை இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: