திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தின் மெத்தன போக்கால் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கால் கல்தூண் மண்டபம் கரும்புகை சூழ்ந்து சேதம் அடைந்துள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றர்.திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் நடராஜரின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையான ரத்தின சபை என்ற சிறப்பு பெற்ற சிவத்தலம். இக்கோயிலில் மாந்திரீக பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தினமும் சாமி தரிசனம் செய்கின்றனர்.
ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கோயில் உள் பிரகாரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட நூறு கால் தூண் மண்டபம் இக்கோயிலின் வரலாற்றுக்கு சாட்சியாக விளங்குகிறது. நூறு கால் மண்டபத்தில் ஆண்டுதோறும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். வரலாற்று சிறப்புமிக்க நூற்றுக்கால் மண்டபத்தை முறையாக பராமரிக்காமல் உலர்ந்த வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு திடீரென்று நூற்றுக்கால் மண்டபத்தில் வைக்கோல் தீப்பற்றி சுமார் இரண்டு மணி நேரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதில், கோயில் முழுவதும் கரும்புகை சூழ்ந்து புராதன சிற்பங்கள் மற்றும் தூண்கள் சேதமடைந்து கலை இழந்து காணப்படுகிறது.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பசு மாடுகளை பராமரிக்க கோசாலை கட்டப்பட்டும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றுக்கால் தூண் மண்டபத்தில் வைக்கோல் அடுக்கி வைக்கப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டு மண்டப தூண்கள் சேதமடைந்துள்ளது. கோயில் பசுக்களை பராமரிக்க நியமிக்கப்பட்ட கோசாலை ஊழியர்களை மாற்று பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலைத்துறையின் முன்னாள் ஆணையரும் தற்போதைய செயலாளருமான குமரகுருபரன், கோசாலையில் பணியாற்ற நியமிக்கப்பட்ட ஊழியர்கள் கோசாலை வளாகத்திற்குள் மட்டுமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி கோசாலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி ஒதுக்கி வருகிறார். இதனால் கோசாலை ஊழியர்கள் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது, பராமரிப்பு மற்றும் பால் கறப்பது போன்ற பணிகள் முறையாக மேற்கொள்வதில்லை. கோசாலை ஊழியர்கள் கோசாலைக்குள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களுக்கு வேறு இடங்களில் பணிகளை ஒதுக்குவது, அரசு உத்தரவை மீறும் செயல் ஆகும். திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தின் இந்த மெத்தன போக்கின் காரணமாக நூற்றுக்கால் மண்டபத்தில் பசுந்தீவனம் வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நூற்றுக்கால் மண்டபத்தில் கல் தூண்கள் புகை சூழ்ந்து கலையிழந்ததாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்;
வடாரண்யேஸ்வரர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக, திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி விசாரணை நடத்தினர். அதில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கோயில் இளநிலை உதவியாளர் கார்த்திகேயன், கோசாலை ஊழியர் ரமேஷ் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
