திருவள்ளூரில் பரபரப்பு; பிரபல கேக் கடையில் பயங்கர தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 ஊழியர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூரில் பிரபல கேக் கடையில் ஏசியின் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் ஜெஎன் சாலையில், பிரபல கேக் விற்பனை கடை உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள், கடையை திறந்து கேக் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடைக்குள் இருந்த ஏசி திடீரென தீ பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்துள்ளனர். கடை முழுவதும் புகை மண்டலமாக மாறியதால், ஊழியர்கள் அங்கிருந்த ஏசியை லாவகமாக உடைத்து வெளியே தள்ளியுள்ளனர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. விபத்தில் கடையில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து, திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் செல்வராஜ் தலைமையில் 8 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட கேக் கடையின் அருகே பிரபல துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வங்கிகள் ஆகியவை அருகருகே இயங்கி வருகிறது. இந்த சூழலில் மின்சார கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து அதிகமாகி இருந்திருந்தால் பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

எனவே இதுபோன்று கடைகள் முறையான அனுமதி பெற்றுள்ளதா, தீயணைப்பு துறையிடமிருந்து அனுமதி பெற்றுள்ளனரா, தீயணைப்பு கருவிகளை வைத்துள்ளார்களா, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கேக் இயங்குகிறதா என்றும் அடிக்கடி ஆய்வு நடத்தப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: