மக்களவை எதிர்க்கட்சி தலைவராக 2 ஆண்டுகள் நிறைவு இந்தியர்களின் குரலை அதிகார மையங்களுக்கு கொண்டு செல்வேன்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற அரசியலமைப்பு பதவி ராகுல் காந்திக்கு கிடைத்தது. அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இந்நிலையில் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நான் பொறுப்பேற்று இன்றுடன்(நேற்று) இரண்டு ஆண்டுகளாகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளின் ஒவ்வொரு நாளும் ஒரேயொரு பணிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. அது ஒவ்வொரு இந்தியரின் குரலையும் அதிகார மையங்களுக்கு கொண்டு சேர்ப்பதாகும்.

நீட் தேர்வு எழுதுபவர்களுக்கான போராட்டம், தேர்தல் முறைகேடுகளை வௌிச்சத்துக்கு கொண்டு வருதல் அல்லது அரசியலமைப்பை பாதுகாத்தல் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு களத்திலும் நான் உங்களுடன் நின்றுள்ளேன். தற்போதும் நான் உங்களுடனே நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்.

தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை மக்களின் நம்பிக்கையே என்னுடைய மிகப்பெரிய பலம். இந்த பயணம் மிகவும் நீண்டது, ஆனால் எனது உறுதிப்பாடு மாறாதது. உங்களுக்கான ஒவ்வொரு போராட்டத்தையும் நான் தொடர்ந்து முன்னெடுப்பேன்” என தெரிவித்துள்ளார். அத்துடன், இரண்டு ஆண்டுகளில் அவர் ஆற்றிய உரைகளின் மூன்றரை நிமிட காணொலியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related Stories: