திருவனந்தபுரம்: கேரளத்தில் கோயில்களில் பணி புரியும் தலைமை பூசாரிகள் மேல்சாந்தி என்று அழைக்கப்படுகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் மேல்சாந்தி பொறுப்புக்கு பூசாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் சபரிமலை சன்னிதானத்தில் வைத்து திருவுளச்சீட்டு மூலம் மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாகும்.
சபரிமலையில் மேல்சாந்தி ஆவதற்கு தினமும் மூன்று முறை பூஜைகள் நடைபெறும் கோயில்களில் தொடர்ந்து 10 வருடங்கள் மேல்சாந்தியாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனையாகும். இந்நிலையில் தற்போது பொறுப்பில் உள்ள மேல்சாந்தி பிரசாத் பணியில் சேருவதற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு அமைச்சர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.
