ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டில் 8 பேரை கைது செய்தது உ.பி போலீஸ்: ரூ.80 லட்சம் பறிமுதல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடையாக கிடைத்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் கையாடல் செய்ததாக கூறப்படும் விவாகரம் கடந்த 7ம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது.

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்று உத்தரப்பிரதேச அரசு கடந்த 13ம் தேதி சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த 23ம் தேதி தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.  சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீகிருஷ்ணா மோகன் நன்கொடை முறைகேடு குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் ராமர்கோயில் நன்கொடை முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ராம் சங்கர் யாதவ் என்கிற டினு, லவ்குஷ் மிஸ்ரா, அனுகல்ப் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட 8 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் 8 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். விசாரணை முடிந்து அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 6 பேர் வங்கி ஊழியர்கள் என்றும் இவர்கள் கோயில் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேரையும் வரும் 29ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்த மாஜிஸ்திரேட் அனுமதி கொடுத்தார்.

* வெறும் கண்துடைப்பு
அயோத்தியில், ஹனுமன்கர்ஹி கோயிலில் வழிபாடு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கோயிலின் நன்கொடைகள் திருடப்பட்டது மிகப்பெரிய பாவம். இதனை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடவுளிடம் இருந்து மிக கடுமையான தண்டையை பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். தற்போது பதியப்பட்டுள்ள வழக்கு வெறும் கண்துடைப்பு மட்டுமே.

இந்த மோசடி நீண்ட காலமாக நடந்து வருகின்றது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு இத்தகைய செயல்களை கீழ்நிலை ஊழியர்கள் மட்டுமே செய்திருக்க முடியாது என்பது வெளிப்படையான உண்மை. மோசடியின் தொடர்புகள் உயர்ந்த மட்டம் வரை செல்கின்றன. ஆனால் முழுப் பழியையும் இந்த சிறிய ஊழியர்கள் மீது சுமத்திவிட்டு பெரிய நபர்களை காப்பாற்ற முயற்சி நடக்கிறது” என்றார்.

* குற்றவாளிகள் யாரும் தப்பவிடமாட்டார்கள்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,” அயோத்தி என்பது அனைவரின் மற்றும் சனாதன தர்மத்தின் நம்பிக்கையின் மீதான அடையாளம். அயோத்தியின் மீது தீய கண்ணை வைக்காதீர்கள். பகவான் ராமரின் கண்ணியத்தை காக்க கற்றுக்கொள்ளுங்கள். சிறப்பு விசாரணை குழு அறிக்கை வந்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

* 25 கிலோ வெள்ளிக்கு ரசீது இல்லை
மும்பையில் பேசிய சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத்,” ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு ரூ.1கோடி நன்கொடைக்கான ரசீதி எங்களுக்கு கிடைக்கவில்லை. அறக்கட்டளை உருவாக்கப்பட்டபோது நாங்கள் ரூ.1கோடிக்கான காசோலையை வழங்கினோம். 25கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள வெள்ளி செங்கல் ஒன்றையும் நாங்கள் வழங்கினோம். இதற்காக ரசீது எங்கள் கட்சிக்கு கிடைக்கவில்லை” என்றார்.

* கோயில் அறங்காவலர் ராஜினாமா
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை கலைக்க வேண்டும் என்றும், அதன் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் கோரிக்கை விடுத்திருந்தார்.

ந்நிலையில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தார்மீக காரணங்களுக்கான தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அறங்காவலர் அனில் மிஸ்ராவும் பதவி விலகி இருக்கிறார். இது குறித்து கோயில் கட்டுமானக்குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில்,” ராமர் கோயில் இயக்கத்துடன் சம்பத்ராய்க்கு உள்ள பல தசாப்த கால தொடர்பை கருத்தில் கொண்டு அவரது நேர்மையை ஒருபோதும் கேள்விக்குட்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: