×

வாடகை தாய் மூலம் பெற்றுக்கொள்ளும் குழந்தைக்கு பெற்றோர் உரிமை கோரும் மனு மீது 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வாடகை தாய் மூலம் பெற்றுக்கொள்ள உள்ள குழந்தைக்கு பெற்றோர் உரிமை கோரி நாமக்கல்லை சேர்ந்த தம்பதியர் நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நாமக்கல் நீதிமன்றம், வாடகை தாய் மூலமாக குழந்தை பெற உள்ள பெண்ணின் வயது 50ஐ கடந்து விட்டது. வாடகை தாயாக செயல்பட உள்ள பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி ஷமீம் அஹமது முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வாடகைத்தாய் ஒழுங்கு முறை சட்டம் குழந்தை பெற விரும்பும் தம்பதியர் வாடகை தாய் மற்றும் பிறக்கவுள்ள குழந்தைகளின் நலனை பாதுகாக்க இயற்றப்பட்ட நலம் சார்ந்த சட்டமாகும். தேவையற்ற சிறு குறைபாடுகளை காரணம் காட்டி குழந்தை பெறும் உரிமையை மறுக்க கூடாது.

மாஜிஸ்திரேட்கள் தகுதிச் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்யும் மேல்முறையீட்டு அதிகாரியை போல செயல்பட முடியாது என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பெற்றோர் உரிமை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ததுடன், மீண்டும் இந்த மனுவை பரிசீலித்து 4 வாரங்களில் நாமக்கல் மாஜிஸ்திரேட் முடிவெடுக்க வேண்டும். வாடகைத்தாயாக செயல்பட தயாராக உள்ள பெண், விருப்பப்பட்டு வாடகை தாயாகியுள்ளாரா? என்பதை விசாரிக்க வேண்டும்.

குழந்தை பிறந்த பின்பு அதன் மீது உரிமை கோரப்போவதில்லை என்ற உத்தரவாதம் பெற வேண்டும். வணிக நோக்கம் இல்லை என்பதில் திருப்தியடைய வேண்டும். குழந்தையை கைவிடப் போவதில்லை என்று குழந்தையை பெற உள்ள தம்பதியரிடம் உத்தரவாதம் பெற வேண்டும். பெற்றோர் உரிமை கோரிய மனுக்களில் 4 வாரங்களில் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முடிவெடுக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உரிய சுற்றறிக்கைகளை பிறப்பிப்பதற்காக இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு வழக்கறிஞர் ஜான் சத்யன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆகியோருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

Tags : High Court ,Chennai ,Namakkal ,Namakkal Magistrate’s Court ,Namakkal court ,
× RELATED அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை...