×

இஸ்லாமியராக மதம் மாறியவருக்கு சிறுபான்மை சான்றிதழ் கிடையாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இஸ்லாமியராக மதம் மாறியவருக்கு முஸ்லிம் லெப்பை எனும் சிறுபான்மையினர் சமூக சான்றிதழ் வழங்க முடியாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவம், கடந்த 2015ல் இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். பின்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் ‘முஸ்லிம் லெப்பை’ என சமூக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை வருவாய்த்துறையினர் நிராகரித்தனர்.

இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியவுடன் அவர் ஒரு முஸ்லிமாக மட்டுமே கருதப்படுவார். லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், ஷேக், சையத் போன்ற குறிப்பிட்ட முஸ்லிம் சமூகங்களின் உறுப்பினராக மதமாற்றத்தின் மூலம் ஆக முடியாது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினால், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழ்நாடு அரசு 9.3.2024ல் வெளியிட்ட அரசாணை (எண் 31), ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணானது.

நீதிமன்ற தீர்ப்புகளை நிர்வாக உத்தரவுகள் மூலம் மாற்ற முடியாது. மதமாற்றத்தின் மூலம் குறிப்பிட்ட சமூக அடையாளத்தைப் பெற முடியாது. லெப்பை, ராவுத்தர் போன்ற சமூகங்கள் பிறப்பின் அடிப்படையில் உருவாகியவை. எனவே, மனுதாரருக்கு ‘முஸ்லிம் லெப்பை’ சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது.

இஸ்லாமியராக மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற தகுதியைக் கோர முடியாது என்று நாங்கள் கருதுகிறோம். அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே, அவ்வளவுதான். இதற்கு அடிப்படையாக இருந்த அரசாணையும் செல்லாது என்பதால், மனுதாரருக்கு சமூக சான்றிதழை நிராகரித்த வருவாய்துறையினரின் உத்தரவு செல்லும் எனக்கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : Islam ,High Court ,Madurai ,Paramasivam ,Thoothukudi ,Sameer Ahmed… ,
× RELATED பரிசு பொருளுடன் காத்திருந்து…...