தேனி: தேமுதிக குறித்து விமர்சிப்பதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் மதிமுக, திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. தனி சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் தவெகவை ஆதரித்து, அமைச்சர் பதவி பெற்று இருக்கலாமோ என்ற எண்ணத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அவ்வப்போது ஆதங்கமாக பேசி வருகிறார்.
மேலும், திமுக கூட்டணி குறித்தும் விமர்சித்து வருகிறார். இதில் தேர்தலின் போது தொண்டர் பலமே இல்லாத தேமுதிகவிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியதோடு ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்கியதை விமர்சித்து வருகிறார். இதற்கு தேமுதிக தரப்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தேமுதிக தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைக்கும் முடிவு ஏற்பட்டது. ஆனால் அதிமுகவுடன் ரகசிய உறவு வைத்து கொண்டு, திமுகவின் வெற்றியை தடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து தங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. தாங்கள்தான் முதல்வர் என்பதாக கூறி மக்கள் நல கூட்டணியை அமைக்க செய்து 2016ம் ஆண்டு தேர்தலை திசை திருப்பியவர் வைகோ.
அன்றைக்கு திமுகவுடன் கூட்டணி ஏற்பட்டிருந்தால் தேமுதிக வளர்ச்சி வேறு விதமாக அமைந்திருக்கும். அதை திட்டமிட்டு கெடுத்தவர் வைகோ. இன்றைக்கு திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவி அளித்தது மற்றும் சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது குறித்து வைகோ விமர்சித்து வருகிறார்.
தேமுதிகவை விமர்சிப்பதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் இல்லையென்று சொன்னால் அவரை ஓட, ஓட விரட்டக்கூடிய காலம் நெருங்கி வரும். இவ்வாறு கூறினார். மேலும் இவர், இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் இப்பதிவினை வெளியிட்டுள்ளார். இது தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
