×

ஒடிசா டூ அரக்கோணம் சர்வீஸ் பைக்கில் 1,500 கி.மீ தூரம் கஞ்சா கடத்தி வந்து விற்ற மாணவன், வாலிபர்

அரக்கோணம்: ஒடிசாவில் இருந்து அரக்கோணத்திற்கு பைக்கில் 1500 கிலோ மீட்டர் தூரம் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்த கல்லூரி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இரட்டைக்குளம் சோதனைச்சாவடியில் கலால் போலீசார் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர்.

பைக்கில் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியை சேர்ந்த ராஜேஷ்(28) என்பதும், மற்றொருவர் 17 வயது கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. ரயிலில் கஞ்சா கடத்தினால் போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் எனக்கருதிய இருவரும் பைக்கில் கஞ்சா கடத்தியுள்ளனர்.

இதற்காக சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒடிசாவுக்கு பைக்கில் சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள வாடகை அறையில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அரக்கோணம், சோளிங்கர், திருத்தணி பகுதிகளில் விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 12.500 கிலோ கிராம் கஞ்சா, பைக், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Odisha ,Arakkonam ,Dhettukulam ,Ranipet district… ,
× RELATED அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை...