×

மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அமைச்சர் மீது பெண் வழக்கறிஞர் புகார்: போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிய கோரிக்கை

சென்னை: மதுரை மேலூர் தொகுதியின் எம்எல்ஏவும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா நடராஜன் என்பவர் தமிழக டிஜிபி, சிங்கப்பெண் படை அதிகாரி, சைபர் கிரைம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மேலூரில் ஜுன் 21ம் தேதி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகளும், இளம்வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் விஸ்வநாதன், அங்கு வந்திருந்த சிறுமிகளுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களின் அனுமதி இன்றி அநாகரிகமான முறையில் உடலின் பல்வேறு பகுதிகளில் தொட்டுள்ளார். மாரத்தானில் பங்கேற்ற சிறுமிகளின் தோள்கள், தொடைகள் மற்றும் கால்களை அமைச்சர் விஸ்வநாதன் திட்டமிட்டே பலமுறை தொட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த செயலால் சிறுமிகள் மிகுந்த மன உளைச்சலுக்கும், அசவுகரியத்துக்கும் உள்ளாகினர் என்பது அங்கிருந்த வீடியோ மூலம் தெளிவாகத் தெரிகிறது. ​அமைச்சரின் அதிகார பலம் காரணமாக அவர்களால் உடனடியாக எதிர்க்க முடியவில்லை. இந்த அநாகரிகச் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களிலும், சிறுமிகளின் முகத்தை அப்படியே வெளியிடப்பட்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கும் செயலாகும் இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். ​ஒரு அமைச்சராகப் பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது சட்டத்தின் மீதான நம்பிக்கையை கெடுப்பதாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை நடுநிலையோடும், சமரசமின்றியும் செய்ய வேண்டும்.  இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Saranya Natarajan ,Tamil Nadu DGP ,Sinhapen Police Force ,
× RELATED அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை...